ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் பொருட்கள் பெறலாம் தொழிலாளர் உதவி ஆணையர் முருகப்பிரசன்னா தகவல்
வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் பொருட்கள் பெறலாம்;
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் பொருட்கள் பெறலாம் என்றுதூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வெளி மாநில தொழிலாளர்கள்
தொழில் நிமித்தமாகவோ அல்லது இதர காரணங்களாலோ மாநிலம் விட்டு பிற மாநிலம் சென்று பணிபுரியும் தொழிலாளர்கள் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-க்கு உட்பட்ட ரேஷன் கார்டு வைத்து இருப்பவர், நாட்டின் எந்த மாநிலத்திலும், எந்த ரேஷன் கடையிலும், அவரது குடும்பத்துக்கான உணவு தானியங்களை பெறலாம். இந்த திட்ட பயனாளி தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு உட்பட்ட முன்னுரிமை ரேஷன்கார்டு அல்லது அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் கார்டு பெற்று இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பயனாளியின் ஆதார் அட்டை எண் மற்றும் கைவிரல் ரேகை பதிவுகள் சரிபார்த்த பின் எந்த ரேஷன் கடையில் இருந்தும் அரிசி அல்லது கோதுமையை மட்டும் அவரது குடும்பத்தின் தகுதியுடைய அளவுக்கு பெற்ற கொள்ள இயலும்.
ரேஷன் பொருட்கள்
அவரது மாநிலத்தில் கோதுமை அல்லது அரிசி இலவசமாகவோ, குறைந்த விலையிலோ வழங்கப்பட்டாலும், இந்த திட்டத்தை பயன்படுத்தும் பயனாளி, மத்திய அரசின் நிர்ணயத்தின்படி அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ.3-ம், கோதுமை கிலோ ஒன்றுக்கு ரூ.2-ம் கொடுத்து பெற வேண்டும். பயனாளியின் குடும்பத்தின் மொத்த உயரிய அளவுக்கு மிகாமல் பல தவணைகளில் ஒரு மாநிலத்தில் ஒரு பகுதியும், வேறொரு மாநிலத்தில் மற்றொரு பகுதியிலும் பெற இயலும். அல்லது ஒரே தவணையில் மொத்த உயரி அளவும் பெற இயலும். இந்த திட்டத்தில் அரிசி, கோதுமை தவிர, கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் இதர வெளி மார்க்கெட் பொருட்களை உரிய விலையில் பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.