அரசு பஸ் மோதி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் பலி
தக்கலை அருகே அரசு பஸ் மோதி ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் பரிதாபமாக பலியானார். மனைவி, மகள் கண் எதிரே இந்த சோக சம்பவம் நடந்தது.
பத்மநாபபுரம்:
தக்கலை அருகே அரசு பஸ் மோதி ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் பரிதாபமாக பலியானார். மனைவி, மகள் கண் எதிரே இந்த சோக சம்பவம் நடந்தது.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்
மார்த்தாண்டம் அருகே மேல்புறம் பாகோடு பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 70), ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். இவருக்கு பிரேமகுமாரி (52) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. 3-வது மகள் அஸ்வதி (20). இவர் இளநிலை பட்டப்படிப்பு முடித்து, முதுநிலை பட்டப்படிப்புக்காக நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்க்க முடிவு செய்தனர்.
இதற்காக நேற்று காலை சுரேந்திரன் தனது ஸ்கூட்டரில், மனைவி, மகளுடன் புறப்பட்டார்.
அரசு பஸ் மோதி பலி
அவர்கள், திருவனந்தபுரம்-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை அருகே அழகர்அம்மன் கோவில் எடைமேடை பகுதியில் செல்லும் போது, பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இதனால் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் சுரேந்திரன் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த பிரேமகுமாரி, அஸ்வதி கண் எதிரே இந்த சம்பவம் நடந்தது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பிரேமகுமாரியை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சோகம்
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அரசு பஸ் டிரைவர் பளுகல் அம்பாடி பகுதியை சேர்ந்த ரமேஷ் (38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்து காரணமாக திருவனந்தபுரம்-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசு பஸ்மோதி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர், மனைவி, மகள் கண் எதிரே பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.