அடகு வைத்த மோட்டார் சைக்கிளை திருப்ப பணம் தராததால் தாய் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த மகன்
அன்னவாசல் அருகே அடகு வைத்த மோட்டார் சைக்கிளை திருப்ப பணம் தராததால் ஆத்திரம் அடைந்த மகன் பெற்ற தாய் என்றும் பாராமல் அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.
அன்னவாசல்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலையை சேர்ந்தவர் லீலாவதி (வயது 55). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் சந்தோஷ்குமார் (26). கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கியதால் காயம் அடைந்து வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்தநிலையில், தனது மோட்டார் சைக்கிளை சந்தோஷ்குமார் அடகு வைத்திருந்தார். அதனை திருப்புவதற்காக தாய் லீலாவதியிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு லீலாவதி தற்போது தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த சந்தோஷ்குமார் தாய் என்றும் பாராமல் லீலாவதி மீது வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து ஊற்றி தீ வைத்தார்.
2 பேரும் காயம்
அப்போது வலி தாங்க முடியாமல் லீலாவதி கதறி துடித்தார். உடனே தாயின் மீது பற்றி எரிந்த தீயை சந்தோஷ்குமார் அணைக்க முயன்ற போது அவர் மீதும் தீ பற்றியது. பின்னர் அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து தாய்-மகன் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து அவர்களை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.