எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய மதுரை ஐகோர்ட்டு மறுப்பு

எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய மதுரை ஐகோர்ட்டு மறுப்பு

Update: 2021-08-31 20:32 GMT
மதுரை
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலர் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச்சட்டத்தின் ஒரு பிரிவு உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நெல்லையிலும் எஸ்.வி.சேகருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர், மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின்போது பல்வேறு கேள்விகளை மதுரை ஐகோர்ட்டு எழுப்பி இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி நிஷாபானு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வக்கீல், “முகநூலில் அந்த பதிவை படிக்காமல் மனுதாரர் பகிர்ந்துள்ளார். இதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்” என்று வாதாடினார்.
அதற்கு நீதிபதி, “அந்த பதிவில் என்ன இருக்கிறது என்று கூட படிக்காமல் ஏன் பிறருக்கு மனுதாரர் பகிர்ந்தார்? இதற்காக மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா?” என கேள்வி எழுப்பினார்.
பின்னர் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என தெரிவித்து, விசாரணையை நீதிபதி ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்