2 விசைப்படகுகளை நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடித்தனர்

ராமேசுவரத்தில் கரையோர கடல் பகுதியில் மீன் பிடித்ததாக 10 மீனவர்களுடன் 2 விசைப்படகுகளை நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடித்தனர்.

Update: 2021-08-31 17:50 GMT
ராமேசுவரம், 
ராமேசுவரத்தில் கரையோர கடல் பகுதியில் மீன் பிடித்ததாக 10 மீனவர்களுடன் 2 விசைப்படகுகளை நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடித்தனர்.
2 படகுகள் சிறைபிடிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதானமாகும். மாவட்டத்திலேயே அதிகமான மீன்பிடி படகுகளை கொண்ட பகுதி ராமேசுவரம்..
அதுபோல் 3 கடல் மைலுக்கு உள்பட்ட கரையோர கடல் பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள ஒலைக்குடா பகுதியில் நேற்று கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் மண்டபத்தை சேர்ந்த 2 விசைப்படகுகள் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.  அப்போது அங்கு நாட்டுப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சங்குமால் மற்றும் ஒலைக்குடா கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், அந்த 2 விசைப்படகையும் அதில் இருந்த 10 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராமேசுவரம் மற்றும் மண்டபம் மீன்வளத்துறை அதிகாரிகள், ஒலைகுடா ஊர் பிரமுகர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 
பறிமுதல்
அப்போது ஒலைக்குடா கிராம மக்கள் மீன்துறை அதிகாரிகளிடம் “ஏற்கனவே இதுபோன்று கரையோர கடல் பகுதியில் மண்டபம் பகுதியை சேர்ந்த சில விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்வதால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே கரையோரத்தில் மீன் பிடித்ததாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 2 விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் படகை விடுவிக்க மாட்டோம்” என்று கோரிக்கை வைத்தனர். 
அப்போது மீன்துறை அதிகாரிகள் இந்த 2 படகிற்கும் மீன்பிடி அனுமதிசீட்டு மற்றும் மானிய டீசல் நிறுத்தப்பட்டு 2 படகுகளும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து 10 மீனவர்களையும் 2 படகையும் மீன்துறை அதிகாரிகளிடம் ஒலைக்குடா கிராம மீனவர்கள் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்