பழனி முருகன் கோவிலில் ரோப்காரில் புதிய கம்பி வடம் பொருத்தும் பணி தீவிரம்
பழனி முருகன் கோவிலில் ரோப்காரில் புதிய கம்பி வடம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக மலையடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார், மின் இழுவை ரெயில் ஆகியவை இயக்கப்பட்டு வருகிறது.
இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப்காரையே விரும்புவார்கள். இயற்கை அழகை ரசித்தபடி 3 நிமிடத்தில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்வதால் பக்தர்கள் ரோப்காரில் விரும்பி செல்கின்றனர்.
பராமரிப்பு பணி
ரோப்காரில் தினமும் ஒரு மணி நேரம், மாதத்துக்கு ஒரு நாள், வருடத்துக்கு ஒரு மாதம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்துக்கான பராமரிப்பு பணி கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி தொடங்கியது.
அப்போது மேல் தளம் மற்றும் கீழ்தளத்தில் உள்ள உதிரி பாகங்கள் மற்றும் கம்பி வடம், பெட்டிகள் அகற்றப்பட்டன. இதையடுத்து புதிய ‘சாப்டு’ கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்டு கடந்த வாரம் பொருத்தப்பட்டது.
புதிய கம்பி வடம்
மேலும் ரோப்காரில் புதிய வடம் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான புதிய கம்பி வடம் வாங்கப்பட்டது. பின்னர் அதை பொருத்தும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 3 வருடங்களுக்கு ஒருமுறை ரோப்காரில் கம்பிவடம் மாற்றுவது வழக்கம். தற்போது புதிய கம்பி வடம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஒரு வாரத்துக்குள் நிறைவடையும். அதன்பிறகு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்காக ரோப்கார் இயக்கப்படும் என்றார்.