கம்பத்தில் வேகத்தடுப்பு கம்பிகளில் ஒளிரும் பட்டைகள் ஒட்டும் பணி
கம்பத்தில் விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடுப்பு கம்பிகளில் ஒளிரும் பட்டைகள் ஒட்டும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கம்பம்:
கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலை வழியாக கேரள மாநிலத்திற்கு பஸ், கார், கனரக வாகனங்கள் என தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இரவு-பகலாக சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலையில் உள்ள சாலை சந்திப்பு, பள்ளிகள், மும்முனை சந்திப்புகளில் போலீசார் வேகத்தடுப்பு கம்பிகள் (பேரிகார்டு) வைத்துள்ளனர். ஆனால் இரவு நேரங்களில், சாலையில் வைக்கப்பட்டுள்ள வேகத்தடுப்பு கம்பிகள் இருப்பது தெரியாமல், வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், கம்பம் போக்குவரத்து போலீசார் சார்பில் வேகத்தடுப்பு கம்பிகளில் ஒளிரும் பட்டைகள் ஒட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானபண்டித நேரு தலைமையிலான போலீசார் நேற்று சாலையில் வைக்கப்பட்டுள்ள வேகத்தடுப்பு கம்பிகள் மற்றும் சாலையோர மரங்களில் ஒளிரும் பட்டைகளை ஒட்டி வருகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் சாலையில் வைக்கப்பட்டுள்ள வேகத்தடுப்பு கம்பிகள், சாலையோர மரங்களில் ஒளிரும் பட்டைகள் மற்றும் அபாய வளைவுகளில் எச்சரிக்கை குறியீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் விபத்து அடிக்கடி நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு வருகிறது என்றனர்.