ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல்-ஆர்ப்பாட்டம்

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-31 16:59 GMT
தேனி:
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை கலைவாணர் அரங்கம் முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி நேரு சிலை சிக்னல் முன்பு அ.தி.மு.க.வினர் நேற்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு சாலையில் நின்றபடி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை கைது செய்ததை கண்டித்தும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். 
சாலை மறியல்
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட துணைச் செயலாளர் முருக்கோடை ராமர், ஒன்றிய செயலாளர்கள் அன்னபிரகாஷ், லோகிராஜன், விமலேஸ்வரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் தேனியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் போடி பஸ் நிலையம் அருகே உள்ள தேவர் சிலை முன்பு போடி நகர அ.தி.மு.க. செயலாளர் பழனிராஜ், போடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பெரியகுளம்
பெரியகுளத்தில் அ.தி. மு.க.வினர் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், நகர செயலாளர் ராதா, நகர துணைச் செயலாளர் அப்துல் சமது, கீழவடகரை ஊராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ராஜகோபால், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அன்பு உள்பட பலர் கலந்துகொண்டனர். 
இதையடுத்து பெரியகுளம், போடியில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 75 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்