ஊட்டியில் வியாபாரிகள் மனித சங்கிலி போராட்டம்
நகராட்சி மார்க்கெட் கடைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஊட்டியில் வியாபாரிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளது. கடந்த 1.7.2016-ந் தேதி முதல் வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து நிலுவை வாடகை முழுவதும் செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.
இதனால் அரசு ஊழியர்களுக்கு குறித்த தேதியில் சம்பளம் வழங்குவது, தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது, வளர்ச்சி பணிகள் உள்பட அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் வாடகை நிலுவை உள்ள கடைகளுக்கு ‘சீல்’ வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி கடந்த 25-ந் தேதி 736 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதனால் நேற்று 7-வது நாளாக மார்க்கெட்டில் கடைகள் மூடப்பட்டு இருந்தது.
ஆணையாளருடன் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் மார்க்கெட் வியாபாரிகள் ஊட்டி நகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு நகராட்சி ஆணையாளர் சரஸ்வதியிடம் கடைகள் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி வியாபாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆணையாளர் கடைகளுக்கு உண்டான நிலுவைத் தொகையை 50 சதவீதம் செலுத்த வேண்டும்.
மீதமுள்ள தொகையை 15 நாட்களுக்குள் செலுத்தப்படும் என்று எழுதி உத்தரவாதம் கொடுத்தால் ‘சீல்’ வைத்த கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். வாடகை நிலுவை முழுமையாக செலுத்திய கடைகள் திறக்கலாம் என்றார்.
மனித சங்கிலி போராட்டம்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வியாபாரிகள் கருப்பு பட்டை அணிந்து நேற்று மாலை ஊட்டி புளுமவுண்டன் சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சீல் வைத்த கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோஷங்களை எழுப்பிய வலியுறுத்தினர்.இதில் இதில் பெண் வியாபாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.