சத்துணவு பெண் ஊழியர் தீக்குளிக்க முயற்சி
சத்துணவு பெண் ஊழியர் தீக்குளிக்க முயற்சி
கோவை
கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வதால், விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாட்களில் அலுவலகம் பரபரப்பாக காணப்படும். இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு வருபவர்களை போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிப்பது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு குனியமுத்தூர் பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த புட்பால் என்பவரின் மனைவி ஜெசி (வயது 45) மற்றும் அவருடைய அண்ணன் பீட்டர் ஆகியோர் வந்தனர். அவர்களை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பி வைத்தனர்.
அப்போது போலீசாருக்கு தெரியாமல் ஜெசி தனது மடியில் சிறிய அளவிலான மண்எண்ணெய் கேனை எடுத்து வந்துள்ளார். பின்னர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் நின்றவாறு மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் ஜெசியை தடுத்து நிறுத்தி மண் எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெசி வால்பாறை அரசு பள்ளியில் சத்துணவு ஊழியராக பணியாற்றி வருவது தெரியவந்தது.
மேலும் அவர், தனது இடத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளார்.இது குறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தபோது போலீசார் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு வந்து மனு கொடுத்தோம்.
அதிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால்தான் தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணெய் கேனுடன் வந்தேன் என்று போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.