திருவாரூர் மாவட்டத்தில் காலியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு
திருவாரூர் மாவட்டத்தில் காலியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தலுக்குரிய வாக்காளர் பட்டியலை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டார்.
திருவாரூர்:-
திருவாரூர் மாவட்டத்தில் காலியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தலுக்குரிய வாக்காளர் பட்டியலை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டார்.
காலியிடங்களுக்கு தேர்தல்
திருவாரூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்குரிய வாக்காளர் பட்டிலை வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறாதது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இறந்தது உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி வரை ஏற்பட்டுள்ள 32 காலி பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவுறுத்தல்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட நிர்வாகத்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
32 பதவியிடங்கள்
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் மாவட்ட ஊராட்சி வார்டு எண் 11, கொரடாச்சேரி ஒன்றிய வார்டு எண் 18, முத்துப்பேட்டை ஒன்றிய வார்டு எண் 11 மற்றும் பள்ளிவாரமங்கலம், மணவாளநல்லூர், விஸ்வநாதபுரம், மூவாநல்லூர், திருவோணமங்கலம் ஆகிய 5 ஊராட்சிகள், கிராம ஊராட்சி வார்டுகள் 24 என காலியாக உள்ள 32 பதவியிடங்களுக்கு உரிய வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டது.
அதன்படி திருவாரூர், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், முத்துப்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 256 கிராம ஊராட்சி வார்டுகளில் 147 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 31 ஆயிரத்து 422 ஆண் வாக்காளர்களும், 32 ஆயிரத்து 457 பெண் வாக்காளர்களும், திருநங்கைகள் 5 பேர் என மொத்தம் 63 ஆயிரத்து 884 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி (தேர்தல்), நக்கீரன் (வளர்ச்சி) ஆகியோர் உடன் இருந்தனர்.
வலங்கைமான்
வலங்கைமான் ஒன்றியத்தில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான தேர்தலுக்குரிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையர்கள் ஆறுமுகம், பொற்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.