வேடசந்தூர் குடகனாறு அணையில் புதிய ஷட்டர்கள் பொருத்தும் பணி தொடக்கம்
வேடசந்தூர் குடகனாறு அணையில் புதிய ஷட்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரியில் 15 ஷட்டர்கள் கொண்ட குடகனாறு அணை உள்ளது. இந்த அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 663 ஏக்கரும், கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 337 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது.
இந்த அணைக்கு ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து தண்ணீர் வருகிறது.. கடந்த 8 வருடங்களுக்கு மேல் ஷட்டர்கள் பழுதடைந்த இருந்ததால் பருவமழை காலத்தில் வரும் தண்ணீரை முழுமையாக தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனிடையே கடந்த ஜனவரி மாதம் வடகிழக்கு பருவமழையால் அணைக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. ஆனால் அணையின் ஷட்டர்களின் பாதுகாப்பு கருதி அணையின் மொத்த கொள்ளளவான 27 அடியில் 24 அடி வரையே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
இதனால் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட விவசாய பாசனத்திற்காக வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது. பிறகு அணையில் 11 அடி தண்ணீர் இருந்தது.
புதிய ஷட்டர்கள்
இதையடுத்து வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் நடவடிக்கையின்பேரில் பழைய ஷட்டர்களை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக புதிய ஷட்டர்களை பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 6.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து ஷட்டர்களின் அருகே இருந்த தண்ணீர் ஆற்றின் வழியாக வெளியேற்றப்பட்டது. பின்னர் பழைய ஷட்டர்கள் அகற்றப்பட்டு புதிய ஷட்டர்கள் பொருத்தும் பணி நங்காஞ்சியாறு செயற்பொறியாளர் கோபி, குடகனாறு உதவி பொறியாளர் முருகன் ஆகியோா் தலைமையில் நடைபெற்று வருகிறது.