பழைய மாமல்லபுரம் சாலையில் 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தம்; வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-08-31 08:37 GMT
சுங்கச்சாவடிகள்
சென்னை, பழைய மாமல்லபுரம் (ஓ.எம்.ஆர்.) சாலையில் கடந்த 1999-ம் ஆண்டுக்கு பிறகு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் அதிகம் வர தொடங்கின. இந்த சாலை சென்னையின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக திகழ்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு ஐ.டி.எக்ஸ்பிரஸ் சாலையாகவும் இந்த சாலை மாறியது. மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சோழிங்கநல்லூர் வழியாக சிறுசேரி வரை 20.1 கி.மீ. தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய 4 வழிப்பாதை அமைக்கப்பட்டது.

மேடு, பள்ளங்கள் இன்றி பளபளக்கும் சாலை, இரவை பகலாக்கும் மின்விளக்குகள், முறையான போக்குவரத்து குறியீடுகளுடன் அமைக்கப்பட்ட இந்த சாலையில், மத்திய கைலாஷில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள பெருங்குடி மற்றும் 19 கி.மீ. தொலைவில் உள்ள நாவலூர் ஆகிய 2 இடங்களில் பெரிய அளவிலான சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதுதவிர பழைய மாமல்லபுரம் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் துரைப்பாக்கம் சாலை, மேடவாக்கம் சாலை மற்றும் கலைஞர் சாலைகளில் 3 சுங்கச்சாவடிகள் என மொத்தம் 5 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த சுங்கச்சாவடிகள் மாநகராட்சிக்கு அருகில் இருப்பதால் இவற்றை மூடக்கோரி போராட்டங்களும் நடந்தன.

கட்டண வசூல் நிறுத்தம்
இந்தநிலையில், தற்போது மெட்ரோ ரெயிலுக்காக மாதவரம் முதல் சிறுசேரி வரை 45.8 கி.மீ. தூரத்தில் அமைக்கப்படும் பாதையில், 19.1 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையில் 20 ரெயில் நிலையங்களும், 26.7 கி.மீ. உயர்த்தப்பட்ட பாதையில் 30 ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது. பணிகளுக்கு இடையூறாக உள்ள பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் அப்புறப்படுத்தப்படும் என்று சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார்.அதன் அடிப்படையில் பெருங்குடி, துரைப்பாக்கம் சாலை, மேடவாக்கம் சாலை மற்றும் கலைஞர் சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியில் இருந்து கட்டண வசூல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வாகன ஓட்டுனர்கள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் செல்கின்றன. தொடர்ந்து சுங்கச்சாவடியில் உள்ள தானியங்கி மூலம் கட்டணம் வசூலிக்கும் எந்திரம், சிக்னல்கள், மின்சாதன பொருட்கள், இரும்பு அறைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

துறை ரீதியான அறிவிப்பு

இதுகுறித்து சுங்கச்சாவடி அதிகாரிகள் கூறியதாவது:-
பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளிலும் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் 15-ந்தேதியிலிருந்து சுமார் 13 ஆண்டுகள் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த சாலையில் கொரோனாவுக்கு முன்பு 1 லட்சத்து 40 ஆயிரம் வாகனங்களும், கொரோனாவுக்கு பிறகு 80 ஆயிரம் வாகனங்களும் தினசரி கடந்து செல்கின்றன. இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்து உள்ளது.சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் இருக்கும்போது கட்டணம் செலுத்துவதால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த பாதுகாப்பு, சாலை பராமரிப்பு, ஆக்கிரமிப்புகள் அகற்றம், விபத்தில் உதவி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அளிக்கப்படுவதுடன் ஒரு கட்டுப்பாடும் இருக்கும். மூடப்பட்ட 4 சுங்கச்சாவடிகளிலும் 300 பேர் பணியாற்றி வந்தனர். அவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் வரவில்லை. நாவலூர் சுங்கச்சாவடி குறித்து துறை ரீதியான அறிவிப்பு வரவில்லை என்பதால் கட்டண வசூல் தொடர்கிறது.

வாகன ஓட்டிகள் வரவேற்பு

இதுகுறித்து கார் டிரைவர் சண்முகம் கூறியதாவது:-
பழைய மாமல்லபுரம் சாலையில் (ஓ.எம்.ஆர்.) உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். இதனால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்கின்றன. ஆனால் நாவலூரையும் தாண்டி மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடக்கவிருக்கிறது.ஆனால் மாநகராட்சி எல்லைக்கு அருகில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படுகிறது. இது வாகன ஓட்டிகளிடையே குழப்பதை ஏற்படுத்தி உள்ளதால் தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்