‘ஹாப்காம்ஸ்' மூலம் ஆன்-லைனில் காய்கறி விற்பனை; மந்திரி முனிரத்னா தொடங்கி வைத்தார்

ஹாப்காம்ஸ் மூலம் ஆன்-லைனில் காய்கறிகள் விற்பனை செய்யும் திட்டத்தை மந்திரி முனிரத்னா தொடங்கி வைத்தார்.;

Update: 2021-08-30 21:13 GMT
பெங்களூரு:

ஆன்லைன் விற்பனை

  கர்நாடக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் பெங்களூருவில் ஹாப்காம்ஸ் காய்கறி கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த கடைகளில் ஆன்லைன் விற்பனை தொடக்க விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் தோட்டக்கலைத்துறை மந்திரி முனிரத்னா கலந்து கொண்டு, ஆன்லைன் விற்பனையை தொடங்கி வைத்து பேசியதாவது:-

  விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறி-பழங்களை நேரடியாக பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவது தான் இந்த ஆன்லைன் வியாபாரத்தின் நோக்கம் ஆகும். இதற்காக ஒரு செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் ஆர்டர் செய்த 2 மணி நேரத்தில் காய்கறிகள் வீடுகளை வந்து சேரும். பெங்களூருவில் மக்கள் நெருக்கம் அதிகம். அதனால் மக்கள் கடைகளுக்கு சென்று காய்கறிகளை வாங்குவதால், அங்கு அதிக நெருக்கடி ஏற்படுகிறது.

குழப்பங்களுக்கு தீர்வு

  இந்த திட்டத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன் அடைவார்கள். இன்னும் 2, 3 மாதங்களில் இந்த திட்டத்தில் உள்ள குழப்பங்களுக்கு தீர்வு காணப்படும். அதன் பிறகு ஆர்டர் செய்த அரை மணி நேரத்தில் காய்கறிகள் வீடுகளை வந்து சேரும். காய்கறிகள்-பழங்களுக்கு கர்நாடகத்தில் விலை குறைவாக கிடைப்பதால் அவற்றை விவசாயிகள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதாக எனக்கு தகவல் வந்துள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  இந்த காய்கறி-பழங்களை பேக்கிங் மற்றும் வினியோகம் செய்யும் பணி தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. வினியோக கட்டணம் வசூலிக்கப்படும். ஹாப்காம்ஸ் மேற்பார்வையில் பேக்கிங் பணிகள் நடைபெறும்.
  இவ்வாறு முனிரத்னா கூறினார்.

மேலும் செய்திகள்