போதைப்பொருள் விற்பனை வழக்கில் கன்னட நடிகை கைது
பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை வழக்கில் கன்னட நடிகை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா சிக்கி உள்ளது.
பெங்களூரு:
விற்பனையாளர் சிக்கினார்
கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடா்பாக பிரபல நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய 2 பேரையும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்திருந்தாலும், அவர்கள் 2 பேரும் போதைப்பொருட்கள் பயன்படுத்தி இருப்பது தடய அறிவியல் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெங்களூரு கோவிந்தபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 12-ந் தேதி போதைப்பொருள் விற்பனையாளரான நைஜீரியாவை சேர்ந்த தாமஸ் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் விற்பனையில் கன்னட நடிகர், நடிகைகள், முக்கிய பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. முக்கிய நபர்கள் 30 பேருக்கு தொடர்பு இருப்பதாக போலீசாரிடம் தாமஸ் கூறி இருந்ததாக தெரிகிறது.
நடிகை வீட்டில் சோதனை
இதையடுத்து, போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்தி வரும் முக்கிய பிரபலங்களை பிடிக்க கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா தலைமையிலான போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அப்போது கன்னட நடிகையும், மாடல் அழகியுமான சோனியா அகர்வால், தொழில் அதிபர்களான பரத், வஜன் சென்னப்பா ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, ராஜாஜிநகர் 4-வது பிளாக்கில் உள்ள சோனியா அகர்வால், பத்மநாபநகர் அருகே உள்ள பரத், பென்சன்டவுனில் உள்ள வஜன் சென்னப்பா ஆகிய 3 பேரின் வீடுகளிலும் நேற்று காலையில் கோவிந்தபுரா போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது சோனியா அகர்வால் வீட்டில் இல்லை என்று தெரியவந்தது.
கஞ்சா சிக்கியது
பின்னர் அவரது தந்தையிடம் இருந்து சாவியை வாங்கிய போலீசார், வீடு முழுவதும் சோதனை நடத்தினார்கள். அப்போது சோனியா அகர்வால் வீட்டில் இருந்து 40 கிராம் கஞ்சா இருந்ததாகவும், அதனை போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர். இதுபோல், வஜன் சென்னப்பா வீட்டில் இருந்தும் போதைப்பொருட்கள் சிக்கியது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தார்கள். அதுபோல், தொழில்அதிபர் பரத்தும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆனால் சோனியா அகர்வால் நேற்று முன்தினம் நள்ளிரவில் கப்பன்பார்க் அருகே உள்ள வணிகவளாகத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றதாகவும், ஆனால் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அவரது செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்ட போதும், சோனியா அகர்வால் எடுத்து பேசவில்லை.
நடிகை கைது
இதற்கிடையில், பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சோனியா அகர்வால் இருப்பது பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்றனர். பின்னர் ஓட்டலில் இருந்த சோனியா அகர்வாலை டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா தலைமையில் சோனியா அகர்வாலிடம் விசாரணை நடந்தது.
அப்போது போதைப்பொருள் விற்பனையாளருடன் சோனியா அகர்வாலுக்கு தொடர்பு இருப்பதும், அவர் போதைப்பொருட்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வந்ததும் தெரிந்தது. அதைத்தொடர்ந்து, சோனியா அகர்வாலை கோவிந்தபுரா போலீசார் கைது செய்தார்கள். கைதான சோனியா அகர்வால், பரத், வஜன் சென்னப்பா மீது கோவிந்தபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனை
இதற்கிடையில், சோனியா அகர்வால் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதை கண்டறிய, அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்தும் விவகாரத்தில் கன்னட நடிகைகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதால் கன்னட திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசாருடன் வாக்குவாதம்
போதைப்பொருள் விற்பனையாளர் தாமசுடன் நடிகை சோனியா அகர்வாலுக்கு தொடர்பு இருப்பது பற்றி நேற்று முன்தினமே போலீசாருக்கு உறுதியான தகவல் கிடைத்திருந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று காலையில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருந்தது. ஆனால் நள்ளிரவில் இருந்து நேற்று அதிகாலை வரை விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்த சோனியா அகர்வால் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று பதுங்கி கொண்டார்.
அவரை போலீசார் பிடிக்க சென்ற போது, போலீசாருடன் சோனியா அகர்வால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதாவது தனது மரியாதை கெட்டு போய் விடும், இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறினார். முன்னதாக ஓட்டலில் உள்ள ஆண்களுக்கான கழிவறைக்குள் அவர் சென்று விட்டதாக தெரிகிறது. பின்னர் பெண் போலீசை, அங்கு அனுப்பி வைத்து சோனியா அகர்வாலை வெளியே அழைத்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.