தொடர்ந்து 4-வது ஆண்டாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது; பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 102 அடியை எட்டியதால் உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.

Update: 2021-08-30 20:50 GMT
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 102 அடியை எட்டியதால் உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கே 16 கிலோ மீட்டர் தூரத்திலும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வடகிழக்கில் 36 கிலோ மீட்டர் தூரத்திலும் பவானி ஆறும் மோயாறும் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. 
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் இந்த அணைக்கு உண்டு. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. 
பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் நீர் வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக திறக்கப்படும் தண்ணீரும், அணை நிரம்பிய பின்னர் திறக்கப்படும் உபரி நீரும் பவானி ஆற்றின் மூலம் பவானிசாகர் அணையில் கலக்கிறது.  கடந்த ஒரு மாதத்திற்கு மேல் அவ்வப்போது பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
102 அடியை எட்டியது
இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி மாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 100 அடியை எட்டியது.
பவானிசாகர் அணையில் தண்ணீர் தேக்குவது குறித்து பொதுப்பணித்துறையில் வகுக்கப்பட்ட விதியின் படி செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை 102 அடிவரையிலும், அக்டோபர் மாதம் முதல் தேதியில் இருந்து அணையின் முழு கொள்ளளவான 105 அடிவரையும் கண்ணீர் தேக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 4 மணி அளவில்  102 அடியை எட்டியது. தொடர்ந்து 4-வது ஆண்டாக அணையின் நீர்மட்டம் 102 எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 863 கன அடி தண்ணீர் வந்தது. 102 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்ற பொதுப்பணித்துறை விதிப்படி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரி நீராக திறக்கப்பட்டது. அதாவது வினாடிக்கு 2 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 
10 ஆயிரம் கன அடி
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்டு பவானி ஆற்றில் மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேறியபோது பொதுமக்கள் ஓ...என்று சத்தமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 
திறக்கப்படும் உபரி தண்ணீர் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கும் போது பவானி ஆற்றின் மேல் மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்