மேம்பால விபத்துக்கான காரணம் குறித்து 10 நாளில் அரசுக்கு அறிக்கை
மதுரையில் மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்துக்கான காரணம் குறித்து 10 நாட்களில் அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று தேசிய தொழில் நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் கூறினார்.;
மதுரை
மதுரையில் கட்டப்படும் மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்துக்கான காரணம் குறித்து 10 நாட்களில் அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று தேசிய தொழில் நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் கூறினார்.
விசாரணை
மதுரை-நத்தம் சாலையில் கட்டப்படும் மேம்பாலத்தின் அணுகு பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து கடந்த 28-ந் தேதி விபத்து ஏற்பட்டது, இதில் தொழிலாளி ஒருவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து தேசிய தொழில் நுட்ப கழக(என்.ஐ.டி.) பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவித்து இருந்தார். இந்த குழுவில் கேரளாவை சேர்ந்த போக்குவரத்து நுட்ப பொறியாளர் சாம்சன் மாத்தீவ், டெல்லியை சேர்ந்த மேம்பால கட்டுமான ஆலோசகர் அலோக் டோமிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் இடம் பெற்றுள்ள பேராசிரியர் பாஸ்கர் நேற்று பாலம் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
விபத்து குறித்து முதற்கட்ட ஆய்வினை மேற்கொண்டேன். பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் இது தொடர்பாக விசாரணை செய்துள்ளேன். 4-ந் தேதி குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களும் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். 10 நாட்களுக்கு பிறகு ஆய்வு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளோம்.
ஹைட்ராலிக் ஜாக்கி
பாலத்தை தூக்கிய போது அதற்கு தேவையை விட குறைந்த பளுவை தாங்கக்கூடிய ஹைட்ராலிக் ஜாக்கி கருவி பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்கள். அதன் தரம் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளோம். விபத்தின் போது இரு பணியாளர்கள் மட்டும் தான் இருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளோம். பேரிங் பொருத்தும் பணியின் போது ஒரு தொழில்நுட்ப பொறியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். அவர் பணியின் போது இருந்தாரா என்பது ஆய்வு முழுமையாக முடிந்த பின்னரே தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய அதிகாரிகள், கட்டுமான ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த மேற்பார்வை பொறியாளர் உள்ளிட்டவர்களிடம் விபத்திற்கான காரணங்கள் குறித்து பேராசிரியர் பாஸ்கர் விசாரணை நடத்தினார்.