மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்

மதுரையில் இருந்து 15 மாதங்களுக்கு பின்னர் செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் நேற்று இயக்கப்பட்டது.

Update: 2021-08-30 20:38 GMT
மதுரை
மதுரையில் இருந்து 15 மாதங்களுக்கு பின்னர் செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் நேற்று இயக்கப்பட்டது.
செங்கோட்டைக்கு...
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, கடந்த வருடம் மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதில் சென்ற நவம்பர் மாதம் முதல் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஓடத்தொடங்கின. ஆனால், பாசஞ்சர் ரெயில் சேவை தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், மராட்டியம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பாசஞ்சர் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், பாசஞ்சர் ரெயில் கட்டணத்தில் இந்த மாநிலங்களில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்களில் எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றம் செய்யப்பட்ட ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
அதனை தொடர்ந்து, மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு சுமார் 15 மாதங்களுக்கு பின்னர் நேற்று முன்பதிவில்லாத முதல் ரெயில் சேவை தொடங்கியது. ஆனால், இந்த ரெயில் எக்ஸ்பிரஸ் கட்டணத்துடன் சிறப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது.
சிறப்பு ரெயில்
அதன்படி, இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06504) மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காலை 10.35 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் சிறப்பு ரெயில் (வ.எண்.06503) செங்கோட்டையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது. இந்த ரெயிலில் 12 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
 திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில்சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் ரெயில் நின்று செல்கிறது. இதற்காக மதுரை ரெயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவுவாயில் பகுதியில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டன.
ரூ.17 ஆயிரம் வருமானம்
மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 310 பயணிகள் நேற்று இந்த ரெயிலில் பயணம் செய்தனர். 155 டிக்கெட்டுகள் விற்பனையானது.
இதன் மூலம் மதுரை ரெயில் நிலையத்தில் நேற்று இந்த ரெயிலுக்கு ரூ.17 ஆயிரத்து 20 வருமானமாக கிடைத்தது. அதேபோல, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரெயில்கள் கொரோனா ஊரடங்கால் திடீரென நிறுத்தப்பட்டதால், இந்த ரெயிலுக்கு சீசன் டிக்கெட் பெற்றிருந்த பயணிகள் 4 பேர் தங்களது டிக்கெட்டை கால நீட்டிப்பு செய்தனர்.
500-க்கும் மேற்பட்ட பயணிகள்
திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்துக்கு ரூ.1,100 வருமானமாகவும், திருமங்கலம் ரூ.675, கள்ளிக்குடி ரூ.120, விருதுநகர் ரூ.3255, திருத்தங்கல் ரூ.1500, சிவகாசி ரூ.2985, ஸ்ரீவில்லிபுத்தூர் ரூ.725, ராஜபாளையம் ரூ.1,495 வருமானமாக கிடைத்துள்ளது. ரெயில் இயக்கப்பட்ட முதல் நாளிலேயே சுமார் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் உற்சாக பயணம் செய்தனர்.
சிறப்பு ரெயிலாக இயக்கப்படுவதால் மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் விருதுநகர் ரெயில் நிலையங்களுக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. திருத்தங்கல், சிவகாசிக்கு ரூ.40, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரூ.45, ராஜபாளையத்துக்கு ரூ.50, சங்கரன்கோவிலுக்கு ரூ.60, பாம்புகோவில் சந்தை, கடையநல்லூருக்கு ரூ.65, தென்காசிக்கு ரூ.70, செங்கோட்டைக்கு ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்