பஞ்சாமிர்தம் தயாரிக்க அனுமதி பெற விலக்கு கோரிய மனு மீது 8 வாரத்தில் முடிவு
பஞ்சாமிர்தம் தயாரிக்க அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு பழனி கோவில் நிர்வாகத்தின் மனுவை பரிசீலித்து 8 வாரத்தில் உரிய முடிவை எடுக்க தொழில்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை
பஞ்சாமிர்தம் தயாரிக்க அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு பழனி கோவில் நிர்வாகத்தின் மனுவை பரிசீலித்து 8 வாரத்தில் உரிய முடிவை எடுக்க தொழில்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பஞ்சாமிர்தத்துக்கு அனுமதி பெற நோட்டீஸ்
பழனி தண்டாயுதபாணி கோவில் இணை கமிஷனர் செல்வராஜ், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பழனி தண்டாயுதபாணி கோவிலில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக பஞ்சாமிர்தம் கோவிலிலேயே தயாரிக்கப்படுகிறது. இதை கோவில் பிரசாதமாக பக்தர்கள் அனைவரும் வாங்கி செல்கின்றனர்.
இந்தநிலையில் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும் என்றும், தொழில்துறை பாதுகாப்பு சட்டத்தின்படி முறையாக பதிவு செய்து, சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட தொழில்துறை இணை இயக்குனர் சார்பில் பழனி முருகன் கோவிலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீசில், பஞ்சாமிர்த ஆலையை முறையாக பதிவு செய்யாதபட்சத்தில் கோவில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
விலக்கு கோரி மனு
இதையடுத்து பழனி கோவிலுக்கு மட்டும் இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே பழனி கோவில் பஞ்சாமிர்த ஆலையை தொழில்துறை சட்டத்தின்கீழ் கொண்டு வரும் நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கும்படியும், இதுதொடர்பான நோட்டீசை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
8 வாரத்தில் பரிசீலித்து முடிவு
அப்போது கோவில் தரப்பில் ஆஜரான வக்கீல், “பழனி முருகன் கோவிலில் தயாராகும் பஞ்சாமிர்தம் வணிக ரீதியில் தயாரிக்கப்படவில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள், பிரசாதமாக வேண்டும் என்று கேட்பதால்தான் பஞ்சாமிர்தத்தை கோவிலில் தயாரித்து வழங்குகிறார்கள். எனவே பஞ்சாமிர்தம் தயாரிப்பது தொழில்துறை சட்டத்தின்கீழ் வராது. இதற்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று வாதாடினார். முடிவில் நீதிபதி, பஞ்சாமிர்தம் தயாரிக்க அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு கேட்டு பழனி முருகன் கோவில் நிர்வாகம் அனுப்பிய மனுவை தமிழக தொழில்துறை செயலாளர் 8 வாரத்தில் பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும்.
அதேபோல கோவில் நிர்வாகம் தரப்பில், இந்த வழக்கு உத்தரவையும், ஏற்கனவே அதிகாரிகளுக்கு அனுப்பிய தங்களின் கோரிக்கை மனுவையும் உடனடியாக தொழில்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.