கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்

கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Update: 2021-08-30 19:28 GMT
அரியலூர்:

சிறப்பு அலங்காரம்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் அரியலூர் பட்டுநூல்காரர் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். நகரில் உள்ள பல வீடுகளில் வாசலில் இருந்து பூஜை அறை வரை கண்ணன் காலடி வைத்து நடந்து வருவதாக மாக்கோலமிட்டு இருந்தனர். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கண்ணன், ராதா, ருக்மணி போன்று வேடமிட்டிருந்தனர். கிருஷ்ணர் சிலை, உருவப்படம் முன்பு சீடை, முறுக்கு, அதிரசம், வெண்ணெய் ஆகிய பலகாரங்களை வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
அரியலூர் நகரில் உள்ள பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் கோவிலில் உள்ள கண்ணன் ராதா, ருக்மணியுடன் தங்கக்கவச அலங்காரத்தில் ஐந்து தலை நாக வாகனத்தில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கொரோனா தொற்று காரணமாக திருவிழாக்கள் நடத்த தடை உள்ளதால் சுவாமி புறப்பாடு, பக்தர்களின் நேர்த்திக்கடன்கள் செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
108 லிட்டர் பாலாபிஷேகம்
ஆண்டிமடம்-விளந்தையில் லட்சுமி நாராயணர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, எளிய முறையில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.
இதன்படி நேற்று மூலவர் லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், பன்னீர்,போன்ற அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்று, பல்வேறு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
தா.பழூா்
தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் கிருஷ்ணர் வருகையைக் குறிக்கும் வகையில் வாசலில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணர் பாதம் வரையப்பட்டு பாரம்பரிய முறைப்படி பண்டிகை கொண்டாடப்பட்டது. கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான அவல், சீடை, முறுக்கு, வெண்ணெய், நாவல்பழம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை படையலிட்டு கிருஷ்ணர் பாடல்களை பாடி பூஜை செய்யப்பட்டது. பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு மகிழ்ந்தனர். தாதம்பேட்டையில் உள்ள வரதராஜர் கோவிலில் ஆகம விதிப்படி இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற உள்ளது. நாளை(புதன்கிழமை) உறியடி உற்சவம் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்