திருப்பத்தூரில் 691 பேருக்கு ரூ.16½ கோடியில் வீட்டுமனை பட்டா, குடியிருப்புகள்
திருப்பத்தூரில் 691 பயனாளிகளுக்கு ரூ.16½ கோடி மதிப்பில் வீட்டுமனை பட்டா மற்றும் குடியிருப்புகளை கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் 691 பயனாளிகளுக்கு ரூ.16½ கோடி மதிப்பில் வீட்டுமனை பட்டா மற்றும் குடியிருப்புகளை கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
691 பேருக்கு பட்டா, குடியிருப்பு
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சர்பில் 691 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 58 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான வீட்டுமனைப்பட்டா மற்றும் பிரத மந்திரி குடியிருப்புத்திட்ட வீடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு வரவேற்று பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.எம்.கதிர் ஆனந்த், சி.என்.அண்ணாதுரை ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அதிக அளவில் வழங்க நடவடிக்கை
விழாவில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசுகையில் மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்புத்திட்ட வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 976 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். முதல்கட்டமாக 691 நபர்களுக்கு தற்போது வீட்டுமனை பட்டா, வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் வீடுகள் அதிகளவில் வழங்கவும் மற்றும் பட்டாயில்லாமல் இருப்பவர்களுக்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
3 மாதத்திற்கு ஒருமுறை
டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி. பேசுகையில் இந்த நிகழ்ச்சியை 3 மாதத்திற்கு ஒருமுறை நடத்தி புதிய பயனாளிகளை கண்டுபிடித்து இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பிரதம மந்திரி குடியிருப்புத்திட்ட வீடுகள் வழங்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன்கள் உரிய நேரத்தில் தடையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மல்லகுண்டா பகுதியில் 1,000 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ளது. இதன் விவரங்களை கொடுத்தால் தொழில்துறை அமைச்சரை சந்தித்து இந்த சட்டசபை கூட்டத்திலேயே திட்டத்தை செயல்படுத்த அறிவிக்க வலியுறுத்துவேன். திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்கவும் நடிவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. சூரியகுமார், கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், உதவி இயக்குநர் அருண் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் நன்றி கூறினார்.