சேந்தமங்கலம் பேரூராட்சியில் கையுறை அணியாமல் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர்கள்-தொற்று நோய் தாக்கும் அபாயம்
சேந்தமங்கலம் பேரூராட்சியில் கையுறை அணியாமல் சாக்கடை கால்வாயை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்தனர். இதனால் அவர்களை தொற்று நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சேந்தமங்கலம்:
கையுறை அணியாமல்...
சேந்தமங்கலம் பேரூராட்சியில் 20-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் பணி பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்யவில்லை என்று நீண்ட நாட்களாக புகார் உள்ளது.
இந்தநிலையில் சேந்தமங்கலம் சங்கொலி நிலையம் முன்பு பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கையுறை அணியாமல் சாக்கடை கால்வாயில் இறங்கி, அதில் இருந்த மண், குப்பைகளை மண்வெட்டியால் எடுத்து அகற்றினர். மேலும் சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்து கொண்டிருந்தனர். கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் வேலை பார்த்ததால் அவர்களுக்கு தொற்று நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிர்ச்சி
இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேரூராட்சியை சேர்ந்த துப்புரவு பெண் தொழிலாளர்கள் மெயின் ரோடு பகுதியை சுத்தப்படுத்தும் பணியில் கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் வேலை பார்த்தனர். அவர்கள் சாலையோரம் இருந்த செடிகள், குப்பைகள், மதுபாட்டில்களை கைகளால் அப்புறப்படுத்தியது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கொரோனா பெருந்தொற்றில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்கு துப்புரவு பணியாளர்களின் பணி இன்றியமையாதது. அவர்கள் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த இடங்களில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவ பரிசோதனை
தற்போது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்கும் பணியில் ஈடுபடும் அவர்களுக்கு கையுறை கூட வழங்காதது வேதனை அளிக்கிறது. எனவே அபாயகரமான சூழலில் வேலை பார்க்கும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொற்று நோய் தாக்குவதை தடுக்க அவர்களுக்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்றனர்.