சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.76½ லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது உறவினர் புகார்
சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.76½ லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது அவருடைய உறவினர் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார்.
ராசிபுரம்:
முன்னாள் அமைச்சரின் உறவினர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் குணசீலன். இவர் சத்துணவு மற்றும் சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜாவின் நெருங்கிய உறவினர் ஆவார். இந்தநிலையில் குணசீலன் முன்னாள் அமைச்சர் சரோஜா சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.76 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக ராசிபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து குணசீலன் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் சரோஜா என்னையும், என் மனைவியையும் அழைத்து ராசிபுரத்தில் வீடு கட்ட வேண்டும். எனவே அதற்கு பணம் வாங்கி கொடுத்தால் சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினார். இதனை நம்பி எனது மனைவி 15 பேரிடம் ரூ.76 லட்சத்து 50 ஆயிரம் வாங்கினார். அதில் ரூ.50 லட்சத்தை முதற்கட்டமாக எனது வீட்டில் சரோஜாவிடம் வழங்கினேன். அப்போது அவருடைய கணவர் டாக்டர் லோகரஞ்சன் இருந்தார். அந்த பணத்தை வைத்து தான் தற்போது ராசிபுரத்தில் உள்ள வீட்டை கிரயம் செய்தார்கள்.
புகார்
இதையடுத்து 2-ம் கட்டமாக ரூ.26 லட்சத்து 50 ஆயிரத்தை அவர்களிடம் வழங்கினேன். ஆனால் சரோஜா தான் கூறியபடி என்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இதனால் பணம் கொடுத்தவர்கள் என் மீது போலீசில் புகார் அளிப்பதாக கூறி வருகிறார்கள். எனவே நான் ராசிபுரம் போலீசில் புகார் அளித்துள்ளேன். அதில் யார்? யார்? எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்ற விவரத்துடன் கூறி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் சரோஜா மீது உறவினரே பண மோசடி புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.