செல்போன் கோபுரத்தில் ஏறி கூச்சலிட்ட தொழிலாளியால் பரபரப்பு
அடமானம் வைத்த நிலப்பத்திரத்தை மீட்டு தரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கூச்சலிட்ட தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்
நிலப்பத்திரம்
கரூர் ராயனூர் அன்பு நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 40), கூலி தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள நிதி நிறுவன அதிபரிடம் தனக்கு சொந்தமான நிலப்பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சேகர் அந்த கடனை செலுத்தி விட்டதாகவும் ஆனால் வட்டி மட்டும் செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த பத்திரத்தை நிதி நிறுவன அதிபர் தராமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
செல்போன்கோபுரம்
இதனால் அதிருப்தி அடைந்த சேகர் நேற்று மாலை திருமாணிலையூர் சாலையில் காட்டுப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தின் 60 அடி உயரத்தில் ஏறி நின்று கூச்சலிட்டு உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சேகர் தனது நிலப்பத்திரத்தை மீட்டு தர வேண்டும் என கூறி கீழே இறங்க மறுத்துள்ளார்.
இதையடுத்து சேகரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கு வந்து நிலப்பத்திரத்தை மீட்டுத்தருவதாக உறுதி அளித்தனர். இதன்பேரில் செல்போன் கோபுரத்தில் இருந்து சேகர் கீழே இறங்கி வந்தார். இதனைதொடர்ந்து போலீசார் அவரை அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.