ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் நகை திருடிய பா.ம.க. நிர்வாகி கைது
அன்மருதை கிராமத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நகை திருடிய பா.ம.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த அன்மருதை கிராமத்தில் வசித்து வருபவர் முனிரத்தினம், ஓய்வுபெற்ற அதிகாரி. இவரின் வீட்டில் கடந்த வாரம் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் திருட்டுப் போனது.
இதுகுறித்து அவர் பெரணமல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகையை பதிவு செய்தனர்.
பதிவு செய்யப்பட்ட கைரேகையும், அதே கிராமத்தைச் சேர்ந்த பா.ம.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் ராதாகிருஷ்ணன் (வயது 34) என்பவரின் கைரேகையும் ஒத்துப்போனது.
இதையடுத்து பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவல்லி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் விரைந்து வந்து, ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.
அவரிடம் இருந்த 12 பவுன் நகைைய பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து, போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.