மூதாட்டியை தாக்கி 10 அடி ஆழ பள்ளத்தில் வீசிய தொழிலாளி கைது
அரிவாள் காணாமல் போனதால் ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை தாக்கி பள்ளத்தில் தள்ளிவிட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;
ஜோலார்பேட்டை
அரிவாள் காணாமல் போனதால் ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை தாக்கி பள்ளத்தில் தள்ளிவிட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கட்டிட தொழிலாளி
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலையில் அத்தனாவூர் குட்டேரி வட்டம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி டிக்கியம்மாள் (வயது 70). இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவரும் வெளியூரில் இருப்பதால் டிக்கியம்மாள் தனியாக வசித்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெருமாளின் மகன் கோபால் (43). கட்டிட தொழிலாளியான அவர் அங்குள்ள ஒரு கட்டிடத்தில் நேற்று முன்தினம் மாலை வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக டிக்கியம்மாள் நடந்து சென்றுள்ளார்.
அவரை வழிமடக்கிய கோபால், எனது வீட்டில் வைத்திருந்த ஒரு அரிவாள் கடந்தசில நாட்களுக்கு முன்பு காணாமல் போய் விட்டது. அந்த அரிவாளை நீ தான் திருடி விட்டாய், எனக்கூறி டிக்கியம்மாளிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு அவர், அரிவாளை நான் எடுக்கவில்லை, எனக்கூறி மறுத்துள்ளார்.
ரத்தம் கொட்டியது
இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த கோபால் திடீரென டிக்கியம்மாளை தாக்கி, அருகில் இருந்த 10 அடி ஆழ பள்ளத்தில் தள்ளி விட்டார்.
அதில் அவரின் உடல் எலும்புகள் உடைந்தன. மூக்கிலும், வாயிலும் ரத்தம் கொட்டியது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து ஏலகிரிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட தொழிலாளி கோபாலை கைது செய்தனர். அவரை, திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.