படகு சவாரி தொடங்கப்படுமா?
காரங்காடு சூழல் சுற்றுலா மையத்தில் படகு சவாரி தொடங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
தொண்டி,
தொண்டி அருகே உள்ளது கடற்கரை கிராமம் காரங்காடு. இந்த கிராமத்தில் இயற்கை தந்த அருட்கொடையாக அமைந்துள்ள சதுப்புநிலக்காடுகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சி அளித்து வருகிறது. மேலும் இந்த சதுப்பு நில காடுகளில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கவும், வசிக்கவும் உகந்த இடமாக கருதி இங்கு பல நாடுகளில் இருந்து ஆண்டு தோறும் வரும் பறவைகளை காணவும் அதன் அழகை ரசிக்கவும் தினமும் சுற்றுலா பயணிகள் அதிகஅளவில் வருகின்றனர். இதனால் வனத்துறை கிராம மக்களுடன் இணைந்து இங்கு சூழல் சுற்றுலா மேம்பாட்டு மையம் செயல்படுத்தி வருகிறது. மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர வனத்துறை சூழல் சுற்றுலா மேம்பாட்டு மையம் மூலம் படகு சவாரி நடைபெற்றது. இதையொட்டி இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்து சென்றனர். கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப் பட்டதால் காரங்காடு கிராமத்தில் கடந்த சில மாதங்களாக படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுஉள்ளது. இதனையொட்டி தனி நபர் படகு சவாரி செய்யும் படகுகள் அனைத்தும் கரையேற்றம் செய்யப்பட்டுஉள்ளது. கொரோனா ஊரடங்கினால் சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலுமாக தடை பட்ட நிலையில் படகு துறை வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனா தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு மீண்டும் படகு சேவை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.