செஞ்சி அருகே குழந்தையை அடித்து துன்புறுத்திய கொடூர தாய் சிறையில் அடைப்பு

செஞ்சி அருகே குழந்தையை அடித்து துன்புறுத்திய கொடூர தாய் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவர் மனநலம் பாதிக்கப்படவில்லை என்று டாக்டர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

Update: 2021-08-30 17:18 GMT
செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மணலப்பாடி அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன் (வயது 26). தொழிலாளி. இவரது மனைவி துளசி (23). இவர்களுக்கு கோகுல்(4), பிரதீப்(2) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் துளசி தனது 2-வது குழந்தையான பிரதீப்பை அடித்து, துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மழலை மொழி கூட மாறாத அந்த குழந்தையிடம் அன்பு, பாசத்தை காட்டாமல் மிருகத்தனமாக துளசி தாக்கும் சம்பவம் அதில் இடம் பெற்று இருந்தது.

 குழந்தையை அரவணைக்கும் இருகரங்களை கொண்டு துளசி இரக்கமின்றி தாக்கியதில், வாயில் இருந்து ரத்தம் சொட்டசொட்ட அந்த குழந்தை அழுத அழுகுரல் பலரது கண்களில் இருந்தும் கண்ணீரை வர செய்தது. 

ஆனால், கல்நெஞ்சம் படைத்த கொடூர தாய், குழந்தையை தாக்கும் போது தனது கை வலிக்கிறது என்று மட்டுமே பார்த்தாரே தவிர, வலியால் துடிக்கும் அந்த பிஞ்சு குழந்தையை எண்ணி கடுகளவும் கவலைப்படவில்லை. 

அவரது இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. அதன் எதிரொலியாக அவரை கைது செய்யும் நடவடிக்கையும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் கைது

இந்த சம்பவம் தொடர்பாக வடிவழகன் செஞ்சி சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில்  இளஞ்சிறார் வன்கொடுமை சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் துளசி மீது செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனா்.

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைத்தார்.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், துளசி ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா ராம்பள்ளி கிராமத்தில் அருணபள்ளியில் உள்ள தாய் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். 

அதாவது, வீடியோ வெளியான மறுநாளே அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர், துளசியை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மனநலம் பாதிக்கப்பட்டாரா?

இதையடுத்து, துளசியை சிறையில் அடைக்கும் முன்பு, நேற்று காலை 10 மணிக்கு மருத்துவ பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

பின்னர் அவர், மனநலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறாரா என்பதை அறியும் வகையில், மனநல மருத்துவர்களிடம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அப்போது, டாக்டர்கள் அவரிடம் சில கேள்விகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் சரியான வகையில் பதிலளித்துள்ளார். இதனால் அவர் மனநலம் பாதிக்கப்படவில்லை என்று டாக்டர்கள் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சிறையில் அடைப்பு

சுமார் 2 மணி நேரம் நடந்த மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், துளசியை அங்கிருந்து போலீசார் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று, சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, குழந்தையை தாக்கிய கொடூர தாய் துளசி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது பற்றி அறிந்த பொதுமக்கள் மருத்துவமனை பகுதியில் திரண்டு வந்து துளசியை பார்த்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


வீடியோ வெளியானது எப்படி?

துளசியின் நடவடிக்கை மீது ஏற்பட்ட சந்தேகத்தால், வடிவழகனுக்கும், துளசிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் துளசி ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். 

இந்த நிலையில், துளசியிடம் இருந்து விவகாரத்து பெற முடிவு செய்த வடிவழகன் ஆந்திர மாநிலத்துக்கு சென்றார். அப்போது கையெழுத்து பெறும் போது திருமணத்தின் போது துளசியின் குடும்பத்தினர் கொடுத்த நகையையும் வடிவழகன் திருப்பி கொடுத்துள்ளார்.

மேலும், தான் வாங்கி கொடுத்த செல்போனை தருமாறு வடிவழகன் துளசியிடம் கூறினார். துளசியும் இத்தனை நாளாக பயன்படுத்தி வந்த செல்போனை அவரிடம் ஒப்படைத்தார். 

செல்போனை பெற்று வீடு திரும்பிய வடிவழகன், எதேச்சையாக அதை பார்த்தபோது தான் அதில், தனது பிஞ்சு குழந்தை, நய வஞ்சக தாயின் கைகளால் ரத்தம் சொட்ட சொட்ட அடி வாங்கும் வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. 

இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற அவர் என்ன செய்வது என்று தெரியாமல், கண்கலங்கினார். இதையடுத்து, தனது மனைவியின் கல்நெஞ்சத்தை உறவினர்களுக்கு தெரிவிக்கும் வகையில் வீடியோவை அவர் அனுப்பிவைத்த போது, அடுத்தடுத்து அந்த வீடியோ வைரலானது தெரியவந்தது.

மேலும் செய்திகள்