தனியார் நிறுவன ஊழியர் கொலையில் 4 பேர் கைது

மதுக்கரை அருகே தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். பழிக்குப்பழியாக நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2021-08-30 17:17 GMT
போத்தனூர்

மதுக்கரை அருகே தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். பழிக்குப்பழியாக நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தனியார் நிறுவன ஊழியர் கொலை 

கோவையை அடுத்த மதுக்கரை அருகே உள்ள போடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் ரமேஷ் (வயது 23). இவர் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 

இவர் நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மதுக் கரை போடிபாளையம் அருகே வழிமறித்த சில நபர்கள் திடீரென்று ரமேசின் கழுத்து, வயிறு தோள்பட்டை உள்ள இடங்களில் அரிவாளால் வெட்டியதுடன், கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

4 பேர் கைது 

இந்த சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன் மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அதேப்பகுதியை சேர்ந்த ரகு கிருஷ்ணன் (22), உதயகுமார் (28), சந்தோஷ் (25), சஞ்சீவ்குமார் (24) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அதில் அவர்கள், ரமேசை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

பழிக்குப்பழியாக நடந்ததா?

மேலும் கடந்த ஜூன் மாதம் போடிபாளையம் பகுதியில் போதை ஊசி பிரச்சினையில் ஜீவானந்தம் என்பவரை மணிகண்டன் கொலை செய்தார். 

இதற்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் ஜீவானந்தத்தின் உறவினர்களாக உதயகுமார், சந்தோஷ், சஞ்சீவ்குமார், நண்பர் ரகுகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் ரமேசை வெட்டிக் கொலை செய்தார்களா? அல்லது வேறுகாரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்