பள்ளி கல்லூரிகளை திறக்க ஏற்பாடுகள் தீவிரம்

கோவையில் பள்ளி கல்லூரிகளை திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதுடன், வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Update: 2021-08-30 17:06 GMT
கோவை

கோவையில் பள்ளி கல்லூரிகளை திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதுடன், வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

பள்ளி, கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி புதன்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை திறக்க கடந்த ஒரு வாரமாக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

முதலில் மைதானங்களில் இருந்த செடிகொடிகள் அகற்றப்பட்டது. அத்துடன் வகுப்பறையும் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வந்தது. தற்போது அந்த பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

கிருமிநாசினி தெளிப்பு

கோவை அரசு கலை கல்லூரியில் உள்ள வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிமுறைகள் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

அதே போல் கடந்த 4 நாட்களாக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து கோவை மாவட்ட கல்வி அதிகாரி கீதா கூறியதாவது:-

20 மாணவர்கள்

கோவை மாவட்டத்தில் பள்ளிகளை சுத்தம் செய்ய ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளிகளுக்கு உடல் வெப்பநிலையை அளக்கும் தெர்மல் ஸ்கேனர் வழங்கப்பட்டு உள்ளது. தேவைப்படும் பள்ளிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் கூடுதலாக வழங்கப்படும். சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க அறிவுறுத்தப் பட்டு உள்ளது.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி நேரடி வகுப்புகளை நடத்தவும், 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்பு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. வகுப்பறைகள், கழிவறைகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்