புதுவையில் பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும்

பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

Update: 2021-08-30 17:00 GMT
புதுச்சேரி, ஆக.
பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
புதுவை சட்டசபையில் பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ. (சுயே) எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-
மறுபரிசீலனை
பி.ஆர்.சிவா: புதுவையில் நாளை மறுநாள் (நாளை-புதன்கிழமை) பள்ளிகளை ஆரம்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் இப்போது நிறைய பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது கொரோனாவா அல்லது வைரஸ் காய்ச்சலா? என்று தெரியாமல் உள்ளது. இத்தகைய சூழலில் புதுவையில் பள்ளிகள் திறப்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
மாணவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்க நம்மிடம் போதிய வசதியில்லை. கடந்த முறை தமிழகத்திலேயே சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு பிரச்சினை ஏற்பட்டது.
அமைச்சர் நமச்சிவாயம்: தமிழகத்தைவிட நம்மிடம் அதிக வசதி உள்ளது. அரசு ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவக்கல்லூரிகள் என போதிய வசதிகள் உள்ளது.
தமிழகத்தை பின்பற்றி...
பி.ஆர்.சிவா: நம்மிடம் வசதிகள் உள்ளது என்று நாம் பேசிக்கொள்ளலாம். ஆனால் நாம் பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்கு செல்லது சென்னையாகத்தான் உள்ளது. சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம் என தமிழக பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளைத்தான் நாடிச்சென்றோம்.
நாஜிம்: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். எனவே தமிழக முடிவினை பின்பற்றியே நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்