ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தர்ணா

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தர்ணா

Update: 2021-08-30 16:13 GMT
பல்லடம்:
பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் சமுதாய நலக் கூடத்தில் அம்மா மினி கிளினிக் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த கிளினிக் ஆறுமுத்தாம்பாளையம் ஆரம்ப சுகாதார மையத்திற்கு இடமாற்றம் திருப்பூர் சுகாதாரத்துறை உதவி இயக்குனர் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து  கிளினிக்கை இடம் மாற்றம் செய்யக்கூடாது என ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், செல்வி, சையதுஒலிபானு, ஈஸ்வரன், முத்துகிருஷ்ணன், மற்றும் சிலர் அறிவொளி நகர் சமுதாய நலக்கூடத்தில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன் கூறியதாவது:- அறிவொளி நகரில்  உள்ள கிளினிக்கை இடமாற்றம் செய்யக்கூடாது என ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி உள்ளோம். அறிவொளி நகர், சபரிநகர், குருவாயூரப்பன் நகர், செந்தில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். உடல் நலக்குறைவு உள்ளிட்ட, நோய்களுக்காக, சிகிச்சை பெற பல்லடம் அரசு மருத்துவமனை அல்லது பூமலூர் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று கொண்டிருந்தனர். ஆறுமுத்தாம்பாளையத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. அதிலும் சிறிய அளவிலான கட்டிடம் என்பதால், அம்மா கிளினிக் அங்கு செயல்படுத்துவது சிரமம், ஏற்கனவே அறிவொளிநகரில் 20 சென்ட் இடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட தேர்வு செய்யப்பட்டு உள்ளது. எனவே அறிவொளி நகரிலேயே அம்மா கிளினிக் செயல்பட, அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்