சீர்காழியில் வீடு புகுந்து ரூ.7 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
சீர்காழியில் வீடு புகுந்து ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சீர்காழி:-
சீர்காழியில் வீடு புகுந்து ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கவிழ்ந்து கிடந்த பீரோ
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி நாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது42). தமிழ் தேசிய பேரியக்க பொறுப்பாளர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய போது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறை கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோ கவிழ்ந்து கிடந்தது. மேலும் அங்கிருந்த பொருட்கள் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. மர்ம நபர்கள் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.
ரூ.7 ஆயிரம் கொள்ளை
இதேபோல் அருகில் உள்ள சபரி நகரில் வசித்து வரும் ஆனந்தன் (42) என்பவரின் பூட்டி இருந்த வீட்டை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அந்த வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைத்து ரூ.7 ஆயிரம் பணத்தை மட்டும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளையடிக்க வந்தவர்கள் விலை உயர்ந்த பொருட்களை கூட திருடாமல் ஒரு வீட்டில் இருந்த பணத்தை மட்டும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். எனவே இதில் தொடர்புடையவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீர்காழியில் வீடு புகுந்து ரூ.7 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டதும், மற்றொரு வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி நடந்து இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.