திண்டுக்கல் அருகே மருந்து விற்பனை கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
திண்டுக்கல் அருகே மருந்து விற்பனை கடைகளில் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் சில மருந்து விற்பனை கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு மாத்திரை வாங்க வரும் பொதுமக்களுக்கு ஊசி போடுவதாக மாவட்ட கலெக்டர் விசாகனுக்கு புகார் வந்தது.
இதையடுத்து புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) அன்புச்செல்வன் தலைமையில் தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள மருந்து விற்பனை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு மருந்து விற்பனை கடையில் மருந்துகள் தொடர்பான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது. மேலும் அந்த கடையில் தற்காலிகமாக வேலை பார்க்கும் ஊழியர்கள் சிலர் டாக்டர் பரிந்துரை இல்லாமல் பொதுமக்களுக்கு மாத்திரைகள் கொடுப்பது, காயங்களுக்கு கட்டு போடுவது, ஊசி போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த கடையை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் அந்த மருந்து கடை மூடப்பட்டது. மேலும் கடை உரிமையாளர், ஊழியர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.