வடசென்னை அனல் மின்நிலையத்தில் விபத்து: காயமடைந்த தொழிலாளர்களுக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்
மீஞ்சூரில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக நெய்வேலியை சேளர்ந்த முருகவேல் (வயது 28), சேலத்தை சேர்ந்த கோபிநாத் (27), தண்டையார்பேட்டை சேர்ந்த ராஜேஷ் (26) உட்பட பலர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லரில் ஏற்பட்ட கோளாறால் மின்கலங்கள் கீழே இறங்கியது. இதனால் பயந்த ஊழியர்கள் அலறியடித்து தப்பித்து ஓடத்தொடங்கினர். அப்போது கொதிக்கும் நிலக்கரி சாம்பல் குவியலில் கால் வைத்த ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேருக்கு தீக்காய விபத்து ஏற்பட்டது.
தொழிலாளர்கள் 3 பேருக்கும் திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தகவலறிந்து ஆஸ்பத்திரிக்கு வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், தொழிலாளர் நலத்துறை இணை இயக்குனர் முருகவேல் ஆகியோர் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் செல்வராஜ்குமாரிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் தொழிலாளர்களை சந்தித்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறும்போது, ‘தொழிற்சாலைகளில் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் பாதிப்படைந்து உள்ளதால் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நஷ்ட ஈடு வழங்கப்படும்.
விபத்து குறித்து தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் நேரில் சென்று விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. விபத்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை வந்த பின்னர், நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.