ஆவணி கிருத்திகை விழா; திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆவணி கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் சரவண பொய்கை குளம் அருகே நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆவணி கிருத்திகை
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முருகப்பெருமானுக்கு உகந்த நாளான ஆவணி கிருத்திகை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர்.குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கோவில் மூடப்பட்ட செய்தி தெரியாமல் மலை அடிவாரத்தில் குவிந்தனர்.
நேர்த்திக்கடன்
தனியார் இடத்தில் மொட்டையடித்து முடி காணிக்கை செலுத்தினார்கள். காவடி எடுத்து வந்து மலைக்கோவில் சரவண பொய்கை குளம் அருகில் தேங்காயை உடைத்து பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் அதிக அளவில் திரண்டதால் போலீசாரும் கோவில் ஊழியர்களும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் மலையடிவாரத்தில் பக்தர்கள் வேல் பூஜை செய்தனர். கோபுர தரிசனம் செய்து மனநிறைவுடன் திரும்பி சென்றனர்.