காலியாக உள்ள 35 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்: சேலம் மாவட்டத்தில் நாளை வாக்காளர் பட்டியல் வெளியீடு
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 35 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்காளர் பட்டியல் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 35 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்காளர் பட்டியல் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத மாவட்டங்களில் விரைவில் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல், சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 35 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளதால் அதற்கான வாக்காளர் பட்டியல் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
35 பதவிகள்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.6.2021 வரை ஏற்பட்ட காலியான பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 16 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், இறப்பு மற்றும் பதவி விலகல் காரணமாக 30.6.2021 வரை ஏற்பட்டுள்ள காலி பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
அதாவது, மாவட்ட ஊராட்சி வார்டு எண்-10 (ஓமலூர் மற்றும் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளை உள்ளடக்கியது), பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய வார்டு எண்-9, கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள் 10 எண்ணிக்கை மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் 23 எண்ணிக்கை உள்ளிட்ட மொத்தம் 35 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியல்
இதனால் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கான சட்டமன்ற வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஊராட்சி வார்டு வாரியான வாக்காளர் பட்டியல்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி வாக்குப்பதிவு அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரால் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் மற்றும் ஊராட்சிகளில் மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் நாளை வெளியிடப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.