கொரோனாவால் தொழில் பாதிப்பு: ‘பணத்துக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தினேன்’-கைதான மர வியாபாரி வாக்குமூலம்

கொரோனாவால் தொழில் பாதிப்பு அடைந்ததால் பணத்துக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தினேன் என்று கைதான மர வியாபாரி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2021-08-29 21:27 GMT
சேலம்:
கொரோனாவால் தொழில் பாதிப்பு அடைந்ததால் பணத்துக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தினேன் என்று கைதான மர வியாபாரி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிறுவன் கடத்தல்
சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே நச்சுவாயனூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 40). தச்சு தொழிலாளி. இவரது மனைவி லதா. இவர்களுக்கு சபரி (14) என்ற மகனும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். கடந்த 22-ந் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் சபரி திடீரென காணாமல் போய்விட்டதாக அவனது பெற்றோர் தொளசம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சிறுவன் சபரியின் தாய் லதா வேலை செய்யும் ஜவுளிக்கடை உரிமையாளர் சரவணனின் செல்போன் எண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் பேசி, சிறுவனை கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.50 லட்சம் கொடுத்தால் அவனை விடுவிப்பதாகவும் கூறியுள்ளான்.
மர வியாபாரி கைது
இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் குகை பகுதியை சேர்ந்த மர வியாபாரி செல்வகுமார் (40) என்பவர், சிறுவன் சபரியை காரில் கடத்தி சென்று தனி அறையில் அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அங்கு சென்று சிறுவனை போலீசார் மீட்டதோடு, செல்வகுமாரையும் கைது செய்தனர்.
இதையடுத்து போலீஸ் விசாரணையில், சிறுவனை கடத்தியது ஏன்? என்பது குறித்து கைதான செல்வகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது:-
தொழில் பாதிப்பு
எனக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டுக்கு தேவையான மரச்சாமான்களை செய்து கொடுக்கும் கடையை நடத்தி வருகிறேன். இரும்பு மற்றும் மரத்திலான பீரோ, கட்டில், ஜன்னல் உள்ளிட்டவற்றை செய்து, வியாபாரம் செய்கிறேன். இதற்காக அம்பாள் ஏரி ரோட்டில் பெரிய அளவில் பட்டறை வைத்துள்ளேன். கடந்த ஒரு வருடமாக கொரோனாவால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. வருமானம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளானேன். இதனால் அதிக பணம் சம்பாதிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். கடந்த 22-ந் தேதி எனது காரில் மேட்டூருக்கு சென்று மது அருந்திவிட்டு அங்கிருந்து காரில் சேலம் திரும்பினேன். அப்போது, சிந்தாமணியூர் அருகே வந்தபோது, சாலையோரம் நின்ற சிறுவனை கடத்தி பணம் பறிக்கலாம் என திட்டமிட்டேன். பின்னர் சிறுவனை கடத்தி சேலத்தில் உள்ள எனது பட்டறைக்கு கொண்டு வந்தேன். பிறகு சிறுவனிடம் குடும்பத்தின் வசதி வாய்ப்பு பற்றி கேட்டேன். அவரது தாய் வேலை செய்யும் ஜவுளிக்கடை உரிமையாளருக்கு போன் செய்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டினேன்.
பணம் சம்பாதிக்க ஆசை
எனது செல்போனில் பேசினால் போலீசில் சிக்கிவிடுவேன் எனக்கருதி திருட்டு செல்போன்கள் மூலம் பேசினேன். தொழிலில் பாதிப்பு ஏற்பட்டதால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் சிறுவனை கடத்தினேன். ஆனால் போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து கைதான மர வியாபாரி செல்வகுமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால் அதன் முடிவு வந்தவுடன் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்