வயலில் உழவு செய்த டிராக்டர் சுழல் கலப்பையில் சிக்கி பள்ளி மாணவர் பலி
குன்னம் அருகே வயலில் உழவு செய்த டிராக்டரின் சுழல் கலப்பையில் சிக்கி பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
குன்னம்:
பள்ளி மாணவர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வைத்தியநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவருடைய மனைவி வேம்பு. இந்த தம்பதிக்கு ராஜேஸ்வரி(வயது 18) என்ற மகளும், தர்மசிவம்(13) என்ற மகனும் உண்டு. தர்மசிவம் நன்னை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி திறக்கப்படாத நிலையில் அவர் வீட்டில் இருந்து வந்தார்.இந்நிலையில் நேற்று ராஜேந்திரன் தனது வயலில் விதைப்பு பணிக்காக, உழவு ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். இதன்படி அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் மஞ்சன் (22) என்பவரை உழவு பணிக்கு அழைத்து வந்துள்ளார்.
சாவு
இதைத்தொடர்ந்து ராஜேந்திரனின் வயலில் மஞ்சன், டிராக்டரில் சுழல் கலப்பை மூலமாக உழவு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த தர்மசிவம் டிராக்டரின் பின்பக்கத்தில் கலப்பையின் மீது ஏறியதாக கூறப்படுகிறது.
இதில் நிலை தடுமாறி டிராக்டருக்கும், கலப்பைக்கும் இடையில் தவறி விழுந்ததில் சுழல் கலப்பையில் சிக்கிய தர்மசிவம் உடலில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த டிராக்டர் டிரைவர் மஞ்சன் டிராக்டரை அதே இடத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
சோகத்தில் மூழ்கியது
இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மசிவத்தின் உடலை பார்த்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது, அங்கிருந்த மற்றவர்களையும் கண்கலங்க செய்தது.
டிராக்டர் சுழல் கலப்பையில் சிக்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவத்தால் வைத்தியநாதபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.