வைகை ஆற்றில் மணல் அள்ளிய மர்மகும்பல்

திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி அருகே ைவகை ஆற்றில் மர்ம கும்பல் மணல் அள்ளி செல்கின்றனர். அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-08-29 19:40 GMT
நிலக்கோட்டை: 

திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி அருகே உள்ள வைகை ஆற்றுப்படுகையில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கும், மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ள வைகை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு மர்மகும்பலை சேர்ந்தவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மணல் அள்ளி சென்றனர். 

இதனால் அந்த பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி சேதம் அடையும் நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் விளாம்பட்டி போலீசிலும், நிலக்கோட்டை போலீசிலும் புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதி மக்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். 

இதனிடையே இரவு நேரத்தில் வைகை ஆற்றில் மணல் அள்ளும் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்