டீக்கடை உரிமையாளர் வீட்டில் 30 பவுன் நகை- ரூ.70 ஆயிரம் திருட்டு
தா.பழூர் அருகே, டீக்கடை உரிமையாளர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 30 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
தா.பழூர்:
நகை- பணம் திருட்டு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் டீக்கடை நடத்தி வருகிறார். இதனால் அவர் தனது குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறார். கோடாலிகருப்பூரில் உள்ள அவரது வீட்டில், அவரது சகோதரி விமலா வசித்து வருகிறார்.
இந்நிலையில் விமலாவின் பேரக்குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கிடைத்த தகவலை அடுத்து, அவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் இடைக்கட்டு கிராமத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த வீட்டின் பின்பக்க கதவை கடப்பாரையால் உடைத்த மர்ம நபர்கள், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.70 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றனர்.
மற்றொரு வீட்டில்...
இதேபோல் அந்த வீட்டின் அருகே உள்ள கவுரி என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த கவுரி சத்தம் போட்டு, விளக்கை எரிய செய்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் கைரேகை நிபுணர்களான சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி, சத்தியராஜ் அடங்கிய குழுவினர் திருட்டு நடந்த வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு, கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.
போலீசார் விசாரணை
அரியலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சென்ற மோப்ப நாய் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடி கோடாலிகருப்பூர் ரெட்டபள்ளம் ஏரி அருகே நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. திருட்டு சம்பவம் மற்றும் மர்ம நபர்களின் உருவம் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். மேலும் இச்சம்பவம் பற்றி தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.