சைபர் குற்றங்கள்
சைபர் குற்றங்கள் புகார்களை தாமதமில்லாமல் பதிவு செய்ய வேண்டும்.
விருதுநகர்,
சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை போலீஸ் நிலையங்களிலேயே தாமதமில்லாமல் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-
பண மோசடி
கட்டுப்பாட்டு அறை சமீப காலங்களில் இணையவழி குற்றவாளிகள் சிலர் இணையம் வழியாகவும், தொலைபேசி மூலமாகவும் பொதுமக்களிடம் அவர்களுக்கு ஆதாயம் ஏற்படும் படியாக தவறான தகவல்களை அவர்கள் நம்பும்படியாக கூறி அவர்களின் செல்போன் மூலம் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) பெற்று மோசடி செய்துபண இழப்பை ஏற்படுத்தும் நிலை அதிகரித்துள்ளது. இதுபோன்று நடைபெறும் குற்றங்களில் அப்பாவி பொதுமக்களின் பண இழப்பை உடனடியாக தடுக்கும் பொருட்டு 155260 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கென 24 மணி நேரமும் செயல்படும் காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. எனவே இணையவழி குற்றங்களால் பாதிக்கப்படுவோர் 155260 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவோ அல்லது தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து சைபர் கிரைம் இணையதளம் மூலமாகவோ தங்களது புகாரை உடனடியாக பதிவு செய்யலாம்.
தாமதமில்லாமல்
மேலும் போலீஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் இணையவழி குற்றங்கள் தொடர்பாக புகார் கொடுக்க வந்தால் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்குத்தான் செல்ல வேண்டும் என்று சொல்லி காலதாமதப்படுத்தாமல் பண இழப்பு குறித்து தகவல் அளிக்க கண்டிப்பாக போலீஸ் நிலையங்களிலேயே மேற்படி கட்டணமில்லா தொலைபேசிமூலம் குறிப்பிட்ட புகாரினை பதிவு செய்ய உதவி செய்ய வேண்டும். புகாரை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் அறிவுறுத்தி உள்ளார்.