பள்ளிபாளையம் அருகே போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்-3 பேர் கைது
பள்ளிபாளையம் அருகே போலீஸ் ஏட்டுவை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம்:
ஏலச்சீட்டு
ஈரோடு புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40). இவர் அங்குள்ள மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தீபிகா (35) ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கொக்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்த தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் ஜான்சன் என்பவர் சீட்டு போட்டு வந்தார்.
இதற்காக ஜான்சன் ரூ.30 ஆயிரம் தவணை தொகை செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஏட்டு மீது தாக்குதல்
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஏட்டு ஜெயக்குமார் கொக்கராயன்பேட்டைக்கு வந்தார். அவர் ஜான்சன் வீட்டுக்கு சென்று தவணை தொகை கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜான்சன் மற்றும் இவருடைய உறவினர்கள் ஜெயக்குமாரை கட்டையாலும், கையாலும் தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஜெயக்குமார் பள்ளிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஜான்சன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஏட்டுவை தாக்கியதாக ஜான்சனின் உறவினர் பிரவீன்சன் (26), வைத்தீஸ்வரன் (25), சிராஜ்தீன் (51) ஆகிய 3 பேரை கைது செய்தனர். ஜான்சன், இவருடைய தம்பி வின்சென்ட் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.