பொன்னை அருகே ஆந்திர மாநில மக்கள் போட்ட ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்
பொன்னை அருகே தமிழக எல்லையில் திடீரென்று ஆந்திர மாநில மக்கள் போட்ட குடிசை ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அதிரடியாக அகற்றினர்.
திருவலம்
பொன்னை அருகே தமிழக எல்லையில் திடீரென்று ஆந்திர மாநில மக்கள் போட்ட குடிசை ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அதிரடியாக அகற்றினர்.
ஆக்கிரமிப்பு குடிசை
வேலூர் மாவட்டம், பொன்னையை அடுத்த தெங்கால் கே.என்.பாளையம் பகுதியில் தமிழக அரசு கால்நடை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேய்ச்சல் நிலத்தை தேர்வு செய்து, அந்தப்பகுதியில் கடந்த மாதம் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், பசுந்தீவன மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த இடம் ஆந்திர மாநிலத்தின் எல்லையோரம் உள்ளது. இந்தநிலையில் ஆந்திர மாநிலம் நாரக்கல் பகுதியை சேர்ந்த சிலர் இப்பகுதியில் திடீரென்று குடிசைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து தெங்கால் கிராம நிர்வாக அலுவலர் பரத் பொன்னை போலீசில் புகார் செய்தார்.
அகற்றம்
வருவாய்துறை அதிகாரிகள் இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில், நேற்று காட்பாடி தாசில்தார் சரண்யா தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மனோன்மணி (பொன்னை), ஆனந்தன் (காட்பாடி) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
மேலும் இந்த இடம் மேய்கால் புறம்போக்கு அரசுக்கு சொந்தமானது. இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டரின் அறிவிப்பு பலகையும் அங்கு அந்த இடத்தில், வருவாய்த்துறையினர் வைத்தனர்.