திருக்கோவிலூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

திருக்கோவிலூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி குலதெய்வம் கோவிலுக்கு வந்த இடத்தில் பரிதாபம்;

Update: 2021-08-29 17:11 GMT
திருக்கோவிலூர்

குலதெய்வம் கோவில் 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அண்ணா நகர் பக்தபூரி தெருவை சேர்ந்தவர்கள் செந்தில், சேதுராமன். இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். 
அதன்படி இரு குடும்பத்தை சேர்ந்த 13 பேர் 2 கார்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் வீரமடை கிராமம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவிலுக்கு நேற்று காலையில் வந்தனர். அங்கு பெரியவர்கள் மற்றும் பெண்கள் குலதெய்வம் வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். 

ஆற்றில் மூழ்கி பலி 

அப்போது செந்தில் மகன் ஆகாஷ்(வயது 17), சேதுராமன் மகன் அபினாஷ்(18) உள்பட 4 பேர் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்தனர். இதில் 2 பேர் குளித்துவிட்டு உடனடியாக கோவிலுக்கு வந்தனர். ஆனால் ஆகாசும், அபினாசும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் உருவான நீர் சுழலில் சிக்கிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர். 
இதற்கிடையில் ஆகாசும், அபினாசும் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவர்களின் குடும்பத்தினா் இருவரையும் தேடி தென்பெண்ணை ஆற்றுக்கு வந்தனர். அங்கு ஆகாஷ், அபினாஷ் ஆகிய இருவரும் பிணமாக மிதந்ததை கண்டு கதறி அழுதனர். 

உடல்கள் மீட்பு 

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி 2 பேர் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் 2 உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
ஆற்றில் மூழ்கி பலியான ஆகாஷ் தனியார் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பும், அபினாஷ் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு மைக்ரோபயாலஜியும் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்