தர்மபுரியில் குழந்தை திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்

தர்மபுரியில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.;

Update: 2021-08-29 17:02 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-
இந்த விழிப்புணர்வு வாகனம் மூலம் தர்மபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய வட்டாரங்களில் ஒலிபெருக்கி மூலமும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். குழந்தை திருமணம் என்பது பெண்ணுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் நிறைவடையாத நிலையில் நடக்கும் திருமணம் ஆகும். இந்த குழந்தை திருமணத்தால் அந்த பெண் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய நிலைஉருவாகிறது.

ஒத்துழைப்பு

தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம்  அபராதம் விதிக்கப்படும். எனவே தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதை முற்றிலுமாக தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, பாதுகாப்பு அலுவலர்கள் சித்தார்த்தன், சரவணா, நன்னடத்தை அலுவலர் சவுதாமணி, குழந்தை நலக்குழு தலைவர் சரவணன் மற்றும் உறுப்பினர்கள் ரவி, உமாமகேஸ்வரி, வள்ளலார் இல்ல இயக்குனர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்