2-வது திருமண வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் பழனியில் குழந்தையை தவிக்கவிட்டு சென்ற தாய், கள்ளக்காதலனுடன் கைது
2-வது திருமண வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை பழனியில் தவிக்க விட்டுச்சென்ற தாய், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
பழனி:
பழனியில், கடந்த 24-ந்தேதி இரவு அரசு மருத்துவமனை அருகே 2 வயது பெண்குழந்தை தனியாக அழுது கொண்டிருந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பழனி டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் அந்த குழந்தையை மீட்டு திண்டுக்கல்லில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை தவிக்க விட்டு சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்தனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கள்ளக்காதல்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 30). இவரது மனைவி ஆனந்தகுமாரி (22). இவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணமாகி, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. மோகன்குமார் திருப்பூரில் உள்ள ஆடை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் ஆனந்தகுமாரி, பொள்ளாச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது, அங்கு கொத்தனார் வேலை செய்து வந்த மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரியஆலங்குளத்தை சேர்ந்த மருது (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. மருதுவுக்கு திருமணமாகவில்லை. இந்தநிலையில் மருது-ஆனந்தகுமாரிக்கு இடையே உள்ள பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
கைது
அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆனந்தகுமாரி தனது குழந்தையுடன் பெரியஆலங்குளத்தில் உள்ள மருது வீட்டுக்கு வந்தார். பின்னர் அங்கு அவர்கள் திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக வாழ்ந்தனர். இந்தநிலையில், குழந்தை அவர்களின் திருமண வாழ்க்கைக்கு இடையூறாக இருந்தது. இதையடுத்து அவர்கள் குழந்தையை எங்கேயாவது விட்டுவிடலாம் என்று முடிவு செய்தனர்.
இதையடுத்து ஆனந்தகுமாரியும், மருதுவும் கடந்த 24-ந்தேதி குழந்தையுடன் பழனிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பழனி அரசு மருத்துவமனை அருகே குழந்தையை தனியாக தவிக்க விட்டுவிட்டு திருமங்கலத்துக்கு திரும்பி சென்று உள்ளனர். இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பழனி டவுன் போலீசார் திருமங்கலம் சென்று மருதுவையும், ஆனந்தகுமாரியையும் கைது செய்தனர். 2-வது திருமண வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் பழனிக்கு வந்து 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி தாய் தவிக்க விட்டுசென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.