கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
வால்பாறையில் தொடர் மழை காரணமாக கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வால்பாறை
வால்பாறையில் தொடர் மழை காரணமாக கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
சோலையார் அணை நிரம்பியது
வால்பாறையில் கடந்த சில நாட்களாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வால்பாறையையொட்டி உள்ள வனப்பகுதியில் புதிய அருவிகள் தோன்றி உள்ளன. மேலும் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
இந்த நிலையில் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
சோலையார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால், அணை முழு கொள்ளளவான 160 அடியை எட்டியது. தொடர் மழையின் காரணமாக சோலையார் அணை 2-வது முறையாக நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 1881 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
மண் சரிவு
வால்பாறை பகுதியில் பெய்த கனமழை காரணமாக அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் உள்ள நடைபாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் நடைபாதை படிக்கட்டு உடைந்து நடராஜ் என்பவரின் வீட்டின் மீது விழுந்து வீடு சேதமடைந்தது.
நடைபாதயையொட்டி உள்ள மின்கம்பம் சாயும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
இந்த நிலையில் இதமான சூழ்நிலையை அனுபவிக்க நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்தனர். ஆனால், மழையின் காரணமாக வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். வால்பறை பகுதியில் நேற்று மழை பெய்து கொண்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தபடி சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். மேலும் அவர்கள் கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் நின்று புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
மழையளவு
வால்பாறை பகுதியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
வால்பாறை- 34, சோலையாறு-41, நீரார்-45, அப்பர் நீரார்-76 மழையும் பதிவானது.