பொள்ளாச்சியில் வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்

பொள்ளாச்சியில் வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்

Update: 2021-08-29 16:14 GMT
பொள்ளாச்சி

நாளை மறுநாள் முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பள்ளிகள் திறப்பு

கொரோனா 2-வது அலையின் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை தாலுகா பகுதிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. பள்ளிகள் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தால் வளாகம் முழுவதும் புதர்மண்டி கிடக்கின்றன.

 இதனால் பொள்ளச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் வகுப்பறைகளை சுத்தப்படுத்தி, கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.

பாதுகாப்பு வழிமுறைகள்

பள்ளிகளில் பயன்படுத்தபடாமல் இருந்த குடிநீர் தொட்டி சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் பள்ளிகள் திறந்ததும் மாணவ-மாணவிகளுக்கு குளோரின் கலந்த தண்ணீரை வினியோகம் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வகுப்பறைகளில் 50 சதவீத மாணவ-மாணவிகள் மட்டும் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்படும். காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் உள்ளவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம். 

மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். மேலும் வகுப்பறைகளில் சமூக இடைவெளியை பின்பற்றப்படும். கூட்டமாக அமர்ந்து சாப்பிட கூடாது.

மேலும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்