கொரோனா தடுப்பூசி வந்தது
திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 66 ஆயிரத்து 200 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. இது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருப்பூர், ஆக.30-
திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 66 ஆயிரத்து 200 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. இது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் 16ந் தேதியில் இருந்து செலுத்தப்பட்டுவருகிறது. முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி வந்தது.
முதலில் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டி வந்த பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வின் காரணமாக செலுத்த முன்வந்தனர். தற்போது மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்கியுள்ளது.
66 ஆயிரத்து 200 டோஸ் வருகை
இதற்கிடையே தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த மாவட்டமாக திருப்பூர் இருந்து வருவதால், தடுப்பூசி தேவைக்கு ஏற்ப சுகாதாரத்துறையிடம் இருந்து கேட்டு பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து நேற்று மேலும் 66 ஆயிரத்து 200 டோஸ் தடுப்பூசி திருப்பூருக்கு வந்தது.
இதில் 60 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டும், 6 ஆயிரத்து 200 டோஸ் கோவேக்சினும் அடங்கும். இந்த தடுப்பூசிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பிவைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.